Skip to main content

ஈழ விடுதலையும், மாயமான் வேட்டையும்..


அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐநா அவையில் கொண்டு வரும் தீர்மானம் அயோக்கியத்தனமானது, அதை தமிழர்கள் எதிர்க்க வேண்டும் என்கிற ஒற்றை வாதத்தை மட்டுமே கேட்டு பழகிய உங்களுக்கு இந்த மாற்றுக்கருத்தை ஜீரணிக்க சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் உண்மையை யாருக்கும் அஞ்சாமல் உரைப்பது எங்கள் கடமையாகிறது.

யார் எதிரி?

தமிழர்களை வரலாற்று ரீதியில் எதிரிகளாக சித்தரித்து, அவர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை பொது புத்தியில் வளர்த்த புத்த பிக்குகள் முதல் இன்று தமிழின அழிப்பை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்தும் இலங்கை அரசு வரையிலான சிங்கள கட்டமைப்பே ஈழத்தமிழர்களின் ஒரே நிரந்தர எதிரி.

இதில், உலகெங்கும் வாழும் தமிழர்கள் இது இனப்படுகொலை என்பதாலும், தன் இனத்தின் எதிர்காலம் சிதைகிறது என்பதாலும் மனிதாபிமான நோக்கில் பார்கின்றனர். சிங்களம் தமிழர்களை அழிப்பதன் மூலம் அவர்களது தாயக நிலங்களை ஆக்கிரமித்து இலங்கை தீவினை ஒரு முழு சிங்கள தேசமாக மாற்ற முயல்கிறது. இந்த இருவர் மட்டுமே இதில் நேரடியான நீண்டகால நோக்கம் கொண்டவர்கள். ஒன்று விடுதலை கோரி.. மற்றொன்று ஆக்கிரமிப்பு நடத்த..


உலகின் மற்ற நாடுகள் அனைத்தும் தத்தமது புவிசார் அரசியல் தேவைக்காகவும், பன்னாட்டு வளர்ச்சிக்காகவும் மட்டுமே இலங்கையை அவ்வப்போது எதிர்க்கின்றன அல்லது ஆதரிக்கின்றன.
இந்த பட்டியலில் இந்தியா, சீனா, ரசியா, கியூபா, இஸ்லாமிய நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை அடங்கும். 

மேற்சொன்ன நாடுகள்/அவர்களின் நண்பர்கள் ஆகியோரின் கூட்டே ஐநா அவை ஆகும். ஆனால் இவர்கள் வரலாற்று ரீதியில் தொடர்புள்ள நிரந்தர எதிரி போல பேசுவது மடமை. தமிழர்கள் சரியான ராஜதந்திர நகர்வுகள் மூலம் இதில் பல நாடுகளை தமக்கு சாதகமாக திருப்ப முடியும் என்பதே முற்று முழுதான உண்மை.


இந்தியாவின் பங்கு:

பிராந்திய வல்லரசாக வலம் வரும் இந்தியா தனது துணைக்கண்ட பிரதேசத்தில் யாரும் நுழைந்துவிட கூடாது என்பதை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது. எனவே இலங்கைக்கு தேவையான உதவிகளை தானே முன்வந்து செய்து தன்னை ஒரு நண்பனாக காட்டிக்கொள்கிறது. இலங்கையில் கால்பதிக்க ஆசைப்படும் உலக நாடுகள் (அமெரிக்கா உட்பட) அதே முறையை பின்பற்றுகின்றன ஆனால் எக்காரணம் கொண்டும் இந்தியாவின் அனுமதி இன்றி அவர்கள் அதிரடியான எந்த நடவடிக்கையும் செய்ய மாட்டார்கள்.

ஆனால் இந்தியா அவர்களிடம் இருந்து இரண்டு வகையில் மாறுபடுகிறது.
1.   இலங்கையில் தமிழினத்தின் போராட்டங்கள் வீழ்ச்சியுற பல வகைகளில் சிங்களத்துக்கு பல தசாப்தங்களாக இந்தியா பணி செய்தது என்பதால் அங்கு நடந்த/நடக்கும் இனப்படுகொலைக்கு இந்தியா நேரடியான பொறுப்பாளி ஆகிறது. இதுவரை சிங்களத்திற்கு ஆதரவாக தன் நாட்டு படைகளை இலங்கையின் எல்லைக்குள்ளேயே அனுப்பி போராளிகளையும், பொதுமக்களையும் கொன்று குவித்து, மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கிய ஒரே ராணுவம் இந்திய ராணுவம் என்பதை நினைவில் கொள்க. 

50,000 கோடியில் வடக்கில் ரயில் பாதையை அவசரம் அவசரமாக இந்தியா கட்டி வருவது ஏன் யார் கண்ணையும் உறுத்தவில்லை. அதை இருட்டடிப்பு செய்வது யாரை காப்பாற்ற?
2.   தேசிய எல்லைகளை கடந்த உலகின் பல மொழிவாரி இனங்கள் தமக்கான விடுதலைகளை அடைந்திட அவர்கள் அவ்வப்போது வாழும் நாடுகளை பயன்படுத்துகின்றன. 

இந்த வகையில் உலகத் தமிழர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்நாட்டு தமிழர்கள் தாங்கள் வாழும் இந்திய தேசத்தை நெருக்கி அதன் வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வருவதே முதல் வேலை. நாம் போடும் ஓட்டுகளும், நாம் கட்டும் வரிப்பணமும் இந்திய தேசத்தை இயக்குகின்ற இன்றைய நிலையில் இது நிச்சயம் சாத்தியம்.

a.   உக்ரைனில் ரசியா எந்த அடிப்படையில் தலையிடுகிறது? இன்றைய தினத்தில் (16-03-2014) க்ரைமியாவில் விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு நடக்கிறது. நாளையோ (17-03-2014) அதற்கு மறுநாளோ ரசியா முன்கூட்டியே தீர்மானித்ததை போல ரசிய இன மக்கள் வாழும் க்ரைமிய பகுதி சுயாட்சி பிரதேசமாகவோ அல்லது ரசியாவின் பகுதியாகவோ மாறும். இதில் உள்ள நியாய தர்க்கங்களை ஒதுக்கி, இது எப்படி சாத்தியமானது என்பதை தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

b.   யூதர்கள் தங்களுக்கான நாட்டை எப்படி பெற்றனர் என்கிற வரலாற்றை தமிழர்கள் புரட்டி பார்க்க வேண்டும். தீயவைகளை விடுத்து பாடங்களை ஏற்க வேண்டும்.

c.   இதே இந்தியா பாகிஸ்தானுடன் போரிட்டு வங்காள தேசத்தை பிரித்து கொடுக்க முடிந்தது இந்தியாவில் வாழும் வங்காளிகளின் தெளிவான அரசியல் காய்நகர்த்தல் மூலம் மட்டுமே.

எனவே இந்தியாவின் போக்கை மாற்ற முடியவில்லை என்றால் தோல்வி நிச்சயம். இந்தியாவின் தொடரும் துரோகம் தமிழர்களின் கையாலாகாத்தனம் மட்டுமல்ல, தனது கடமையில் இருந்து தமிழினம் தப்பிக்கும் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.


அமெரிக்க எதிர்ப்பு:

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானங்களில் இனப்படுகொலை விசாரணை என்றோ, ஈழ விடுதலை என்றோ நேரடியாக இருக்கும் என எதிர்பார்ப்பது முதிர்ச்சியின்மை. தனது புவிசார் நலனை மட்டுமே எதிர்பார்த்து செயல்படும் அமெரிக்காவிடம் இருந்து தமிழர்கள் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? 

ஆனால் அமெரிக்கா தனது சொந்த நலனை கருத்தில் கொண்டு முன்னெடுக்கும் வேலைகளில் தமிழர்களின் நலனும் நிறைவேறும் என்பது ஏன் இருட்டடிப்பு செய்யப்படுகிறது? உதாரணமாக வரும் 18 ஆம் தேதி ஐநா மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ள அமெரிக்க தீர்மானத்தின் இரண்டாம் பத்தியில் உள்ள இந்த வாசகங்களை கவனிக்க

Takes note of the High Commissioner’s recommendations and conclusions regarding ongoing human rights violations and the need for international inquiry mechanism in the absence of a credible national process with tangible results, and requests the Office of the High Commissioner : to lead a comprehensive investigation into alleged serious violations and abuses of human rights and related crimes by both parties in Sri Lanka and establish the facts and circumstances of such violations and of the crimes committed with a view to avoiding impunity and ensuring accountability, with assistance from relevant experts;

இலங்கையில் நடந்தாக சொல்லப்படும் மிகவும் மோசமான வரம்பு மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இது தொடர்பாக இருதரப்பிலும் நடந்த குற்றங்கள் குறித்தும், அவற்றின் உண்மைதன்மை பற்றியும், அவை நடந்த சூழ்நிலைகள் பற்றியும் குற்றவாளிகள் தப்பி செல்ல வழி இல்லாதவாறு, பொறுப்பேற்க வகை செய்யும் விரிவான பன்னாட்டு புலனாய்வை ஐநா மனித உரிமை ஆணையாளர் நடத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது – என்கிறது மேற்கண்ட வாசகம்.

இந்த வரிகள் நமக்கான விடுதலையை உறுதியாக சொல்லவில்லை என்றாலும் இதை ஒத்த  எந்த ஒரு வார்த்தையையும் உலகின் எந்த நாடுகளும் பேச மறுக்கிறன என்பது உண்மைதானே?

நாம் திருப்திபடும் விதமான வார்த்தைகளை கொண்ட ஒரு தீர்மானத்தை முன்மொழியாத  காரணத்தால் ஐநா/அமெரிக்க கொடிகளை எரிக்க வேண்டும் என்றால், உலகத்தில் எந்த நாடும் இலங்கையை பற்றி வாய் கூட திறக்க கூடாது, அங்கு நடந்தது முற்றிலும் உள்நாட்டு பிரச்சனை அதை பற்றி யார் பேசினாலும் நாங்கள் “வீட்டோ” அதிகாரம் கொண்டு தடுப்போம் என்று சூளுரைக்கும் ரசியா, சீனா நாடுகளை இவ்வளவு வீரியமாக எதிர்க்காததன் மர்மம் தான் என்ன?

மேற்சொன்ன இலங்கையின் “உயிர் தோழன்” நாடுகளை இரண்டாம் கட்டத்துக்கு நகர்த்தி அமெரிக்காவை நோக்கி தமிழர்களின் கவனத்தி திருப்பி முதல் எதிரிகளை காப்பாற்றும் “போலி புரட்சியாளர்களை” விட அமெரிக்கா அயோக்கியமானவனா?

கேள்வி கேட்பது, குற்றச்சாட்டு வைப்பது, ஆதாரங்களை அடுக்குவது, ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வது ஆகியவை மட்டுமே ஈழ விடுதலைக்கு உதவி செய்யும். உலக நாடுகளின் (அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உட்பட) கொடிகளை எரிப்பதும், கடைகளை உடைப்பதும் நிச்சயமாக அந்த நாடுகளுக்கும் தமிழ் இனத்திற்கும் உள்ள இடைவெளியை மேலும் அதிகப்படுத்தவே உதவும். ராஜபக்சேவுக்கு இதை விட இனிப்பான ஒரு செய்தியே இருக்க முடியாது.



ஏற்கனவே ராஜதந்திர நகர்வுகளில் சிங்களத்தை காட்டிலும் பன்மடங்கு பின்தங்கி உள்ள தமிழினம் மேலும் மேலும் வீழ்ச்சிகளையே சந்திக்கும். இதே மாதிரியான பக்குவமற்ற மோடுமுட்டித்தனமான அரசியல் நிலைப்பாட்டை தமிழ் மாணவர்கள் மீதும், மக்கள் மீதும் திணித்தால் நண்பனாக வாய்ப்புள்ள மேலும் பல நாடுகளையும் நமக்கு எதிரியாகவே மாற்ற முடியும்.

\எல்லாவற்றையும் விட முக்கியமாக இங்கு ஈழத்தின் தலையெழுத்தை மாற்றும் சக்தி படைத்த இந்தியாவை நம் வசப்படுத்தாமல் எந்த கொம்பனாலும் எதையும் சாதிக்க முடியாது. இந்தியாவின் வெளியுறவு கொள்கையை மாற்ற இது மிக சிறந்த தருணமாகும்.



போதும் இந்த மாயமான்   வேட்டை. 

இந்தியாவை நெருக்குவதே முதல் வேலை..

உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

ராசா ஸ்டாலின் - 98848 77487
சூரிய பிரகாசு  - 98409 92689

Comments

Popular posts from this blog

ஐநா தீர்மானம் - அமளிக்கு இடையில் வாக்கெடுப்பு

நேற்று (27-மார்ச்-2014) அன்று ஐநாவின் மனித உரிமை கழகத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த பதிவில் தீர்மான நாளில் நடந்த அமளிகள் குறித்து பதியப்பட்டுள்ளது. தீர்மானத்தில் இலங்கையில் நடந்த மனித  உரிமை மீறல், போர் குற்றம், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்நாட்டு விசாரணை முறைகள் தோல்வி அடைந்துவிட்டன என்றும், எனவே இலங்கையில் நடந்த குற்றங்கள் மீது ஒரு பன்னாட்டு விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. காண்க:  http://www.un.org/ga/search/view_doc.asp?symbol=A/HRC/25/L.1/Rev.1 இது நிறைவேறிய விதம் குறித்த பதிவு இது. முதலில் தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய அமெரிக்கா, பிரான்சு, மசிடோனியா, மொரீசியஸ் ஆகிய நாடுகள் அதற்கான நியாயங்களை விளக்கின. ஆனால் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவிடாமல் பாகிஸ்தான், சைனா போன்ற இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் சண்டித்தனம் செய்தனர். சீனா இந்த தீர்மானம்  இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று வாதிட்டது. இந்த தீர்மான நிகழ்வுகளின் போது சீனா, ரசியா, கியூ...

செவ்வாய் கிரக முற்றுகை போராட்டம்

ஈழ விடுதலைக்கு தடை போடும் நாடுகளின் பட்டியல் ஒன்றாக இருந்தாலும், அவற்றின் தர வரிசை மாறுபட்டதாகவே இருக்கிறது. குறிப்பாக இலங்கை, இந்தியா, ஐ.நா, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ஜப்பான் என்று நீளும் எதிரிகள் பட்டியல் தனி நபர்களின் வசதிக்கு தங்குந்தாற்போல் விஷத்தன்மைக்கான தர வரிசை மாற்றி கட்டமைக்கப்படுகிறது. இந்த தரப்படுத்தல் முறையானது தனி நபர் விருப்பம், அரசியல் கொள்கைகள், முட்டு கொடுக்கும் அமைப்புகளின் விருப்பம், காசு கொடுக்கும் கட்சிகளின் கொள்கை மற்றும் சா-பூ-த்ரீ போன்ற இதர அறிவியல் பூர்வமான முறைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த நேயர் விருப்ப பட்டியலை நியாயப்படுத்த தங்கள் தரப்பு வாதங்களையும் எடுத்து வைக்கின்றனர். மேற்குறிப்பிட்ட அனைவருமே துரோகிகள் என்பதால் கருத்து பரப்பல் செய்ய எல்லா தரப்பினருக்குமே போதுமான தரவுகள், தகவல்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இந்த தரப்படுத்தலில் மிக நுட்பமாக காப்பாற்றப்படும் நாடு இந்தியா தான். தமிழ் தேசியவாதிகள் என்று காட்டிக்கொள்ளும் பலர் இந்திய குடிமக்களாக இருப்பதனால் அவர்களின் தாய்நாட்டு பாசம் மெச்சத்தக்கதே என்றாலும், அதற்கு பின்னாலுள்ள அரசியலை நாம் சற்ற...

இலங்கையின் இனப்படுகொலையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு கோரி - கருத்தரங்கம்

இலங்கையின் இனப்படுகொலை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த கோரி கருத்தரங்கம் நாள்: 02 மார்ச் , 2013 , மாலை 4.00 மணி இடம்: செ.தெ.நாயகம் பள்ளி, தி.நகர் இன்று நடந்த இந்த கருத்தரங்கில் கீழ்கண்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர். 1.        T.S.S மணி, மனித உரிமை போராளி 2.        இரா. அருள், பசுமை தாயகம், மாநில அமைப்பாளர் 3.        மருத்துவர். வேலாயுதம், சமூக முன்னேற்ற சங்கம், மாநில தலைவர் 4.        நாகராஜன், Global Tamil Organization 5.        செல்வ பாண்டியன், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்     மேலும் பலர்  கீழ்கண்ட கருத்துகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன: T.S.S. மணி : ·         இனப்படுகொலையா அல்லது போர் குற்றமா என்று தமிழர்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது. போர்குற்ற புலனாய்வு ஈழ விடுதலையை தடுக்கும் என்றெல்லாம் சொல்...