Skip to main content

கல்லம் மக்ரே நேர்காணல் - கேள்வி பதில்கள்

22 பிப்ரவரி அன்று தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மய்யமும் இணைந்து நடத்திய "சேனல் 4 ஆகச்சமீப காணொளி" திரையிடல் நிகழ்வை தொடர்ந்து அதன் இயக்குனர் கல்லம் மக்ரே உடனான இணையவழி காணொளி கலந்துரையாடலின் கேள்வி பதில்கள் இங்கே:

=========================================

கேள்வி:             காணொளி ஆதாரங்கள் அனைத்தும் இனப்படுகொலையை நிரூபிக்கின்றன ஆனால் இன்னும் ஏன் நாம் போர் குற்றம் என்றே சொல்ல வேண்டும்? நடந்தது இனப்படுகொலை என்று நீங்கள் ஏற்கிறீர்களா?

கல்லம் மக்ரே:            இருக்கும் ஆதாரங்களை கொண்டு பார்க்கையில் இவை இனப்படுகொலைக்கான சாத்தியங்களை காட்டுகின்றன. Ethnic Re-engineering நடந்ததை/நடப்பதை நாம் உணர முடிகிறது. எனது தனிப்பட்ட கருத்தில் இனப்படுகொலைக்கான சாத்தியங்கள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் போர் குற்றங்களும் கூட. ஒரு சர்வதேச விசாரணைக்கான உடனடி காரணிகளாக இவை நிற்கின்றன.

கே:       அமெரிக்காவின் தீர்மானம் எந்த அளவில் அழுத்தம் உள்ளதாக இருக்கும்?

பதில்:   கடந்த காலங்களில் இலங்கையில் தொடர்ந்த குழப்பநிலைக்கு மேற்குலக நாடுகளை இலங்கை குறை கூறி வந்துள்ளது எனவே தனது ராஜதந்திர எல்லைக்குள் நின்று இலங்கை மீது நெருக்கடியை உண்டாக்கும் அளவுக்கு அமெரிக்காவின் தீர்மானம் இருக்கலாம்.சென்ற ஆண்டை காட்டிலும் இன்னும் அழுத்தமான தீர்மானத்தை எதிர்பார்க்கலாம். இது ஒரு இடைக்கால தீர்வையேனும் தர கூடியாதாக இருக்கும் என்பது எனது நம்பிக்கை.

கே:       இந்த பிரச்சனையில் நீங்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்ய தயாராக இருக்கிறீர்கள்?

பதில்:     நான் முதலில் ஒரு பத்திரிக்கையாளன். நடந்த உண்மைகளை பதிவு செய்வதும், எனது படைப்பின் மீது எழுப்பப்படும் குற்றசாட்டுகளுக்கு பதில் சொல்லி எனது வாதங்களை மெய்ப்பிப்பதுமே எனது வேலை. மற்றபடி நான் பிரச்சாரகன் அல்ல. பிரச்சாரம் செய்ய வேண்டியவர்கள் தமிழர்களும் இதில் ஆர்வம் உள்ள பிறரும். என்னால் ஆன தரவுகளை அளிப்பதே எனது வேலை.

கே:        இலங்கையின் வடக்கு-கிழக்கு  பகுதிகளுக்கு  சென்றீர்கள். அங்கு உள்ள மக்களின் நிலை பற்றி சொல்லுங்கள்.

பதில்:      பெரும்பாலானவர்கள் நெருக்கடியான நிலையில் தான் என்னுடன் உரையாடினர். ஆனால் அவர்கள் உள்ளூர மிகவும் மகிழ்ச்சியின்றி இருப்பதாகவே என்னால் உணர  முடிந்தது.

கே:        சென்ற ஆண்டு இந்தியா வருவதற்கு உங்களுக்கு விசா மறுக்கப்பட்டது. அதை பற்றி கூறுங்கள்.

பதில்:      எனது விசா மறுக்கப்பட்டதற்கு இந்தியா கொடுத்த காரணம் "சென்ற முறை விசாவில் வந்த போது பயண விதிகளை மீறியது" என்பதாகும். ஆனால் அதை உண்மை என்று நான் நினைக்கவில்லை. உண்மையில் இந்தியா இந்த காணொளி தனது நாட்டில் திரையிடப்படுவதை விரும்பவில்லை. இதனால் இலங்கை உடனான தனது உறவில் விரிசல் ஏற்படும் என்கிற அச்சத்தையே கொண்டிருக்கிறது. இந்தியா எனக்கு விசா மறுத்ததற்கு காரணம் நாங்கள் திரையிட முயன்ற உண்மையின் மீதான பயம். எனவே இந்தியா "உண்மையின் மீதான பயத்தில் தான் எனக்கு விசா மறுத்தது."

கே:         இத்தனை ஆண்டுகள் பல ஆதாரங்களை முன்வைத்தும் சர்வதேச சமூகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே. நீதி கிடைக்குமா?

பதில்: உங்கள் விரக்தி எனக்கு புரிகிறது. நீதி நிச்சயம் கிடைக்கும். சர்வதேச அளவில் தமிழர்களின் சுய நிர்ணய உரிமை, சனநாயக உரிமைகள், தமிழ் தேசிய வேட்கை ஆகியவற்றிற்கான அங்கீகாரங்கள் பரவலாக் இருக்கவே செய்கிறது.. எனவே நிச்சயமாக நீதி கிடைக்கும்.

கே:     தமிழர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

பதில்: இந்தியாவை தங்கள்  பக்கம் திருப்ப வேண்டும். இந்தியா முயலாமல் இந்த விடயத்தில் உலக நாடுகள் செய்ய கூடிய செயல்கள் மிக குறைவே. பிராந்திய சக்தியான இந்தியா தனது மக்களின் நலனுக்காகவும், இலங்கை மக்களின் நலனுக்காகவும் இந்த பிரச்னைக்கு தீர்வுக்கான முன்வர வேண்டும். இந்த சிக்கலை தீர்ப்பதற்கு இந்தியாவிற்கு தார்மீக கடமை உள்ளது. இல்லை என்றால் இந்தியா இரு தேசத்து மக்களையும் ஏமாற்றுவதாக ஆகும்.


இவை தவிர கல்லம் மக்ரே முன்னிறுத்திய பிற கருத்துக்கள்:

1. புலிகளுடனான போர் முடிந்துவிட்டது ஆனால் இலங்கை அரசு இன்னும் தமிழ் மக்களுடன் போர் செய்து கொண்டே இருக்கிறது. இன்னும் ஓரிரு வருடங்களில் தங்களது முழு போரையும் வெற்றிகரமாக முடித்துவிடுவார்கள். எனவே தமிழர்கள் மிக மிக விரைவாக போராடி ஒரு தீர்வினை எட்ட வேண்டும். இது மிகவும் அவசியம்

2. போர் காலங்களில் பெரும்பான்மையான மரணங்கள் இலங்கை இராணுவத்தாலேயே நடந்தது என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. பின்னர் பல தமிழர்களை மிரட்டி பொதுவெளியில் தன்னுடைய பிம்பத்தை சீரமைக்க முயன்று வருகிறது.

3. இலங்கையில் ஒரு தன்னிச்சையான நீதித்துறை கிடையாது. அவை சடங்கு முறைக்காகவே உள்ளன.  இலங்கையின் உள்நாட்டு நீதி மன்றங்களில் எந்த வித நீதியையும் எதிர்பார்க்க முடியாது.

4. இலங்கை அரசு போர்குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், விமர்சகர்கள் மீதான தாக்குதல்கள், பத்திரிக்கையாளர்கள், எதிர்கட்சியினர் என்று பலர் மீதும் சர்வதேச மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை புரிந்துள்ளது.

5. நான் இந்த காணொளிகள் மூலம் ஆட்சி மாற்றத்தை கோரவில்லை. தேவை உண்மையும் நீதியும்.

6. இலங்கை தனது ராஜதந்திர நகர்வுகள் மூலம் பரஸ்பர எதிரிகளை கூட இந்த விடையத்தில் தனது பக்கத்தில் வைத்துள்ளது. உதாரணமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய நாடுகள் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இலங்கை அவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறது. இதை நாம் கவனிக்க வேண்டும்.

(ஏதேனும் திருத்தங்கள்/விடுபட்டு இருந்தால் தெரியப்படுத்தவும்.)

நன்றி!!

Comments

Popular posts from this blog

ஐநா தீர்மானம் - அமளிக்கு இடையில் வாக்கெடுப்பு

நேற்று (27-மார்ச்-2014) அன்று ஐநாவின் மனித உரிமை கழகத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு தீர்மானம் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. இந்த பதிவில் தீர்மான நாளில் நடந்த அமளிகள் குறித்து பதியப்பட்டுள்ளது. தீர்மானத்தில் இலங்கையில் நடந்த மனித  உரிமை மீறல், போர் குற்றம், மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்நாட்டு விசாரணை முறைகள் தோல்வி அடைந்துவிட்டன என்றும், எனவே இலங்கையில் நடந்த குற்றங்கள் மீது ஒரு பன்னாட்டு விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. காண்க:  http://www.un.org/ga/search/view_doc.asp?symbol=A/HRC/25/L.1/Rev.1 இது நிறைவேறிய விதம் குறித்த பதிவு இது. முதலில் தீர்மானத்தை அறிமுகம் செய்து பேசிய அமெரிக்கா, பிரான்சு, மசிடோனியா, மொரீசியஸ் ஆகிய நாடுகள் அதற்கான நியாயங்களை விளக்கின. ஆனால் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவிடாமல் பாகிஸ்தான், சைனா போன்ற இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடுகள் சண்டித்தனம் செய்தனர். சீனா இந்த தீர்மானம்  இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்று வாதிட்டது. இந்த தீர்மான நிகழ்வுகளின் போது சீனா, ரசியா, கியூ...

செவ்வாய் கிரக முற்றுகை போராட்டம்

ஈழ விடுதலைக்கு தடை போடும் நாடுகளின் பட்டியல் ஒன்றாக இருந்தாலும், அவற்றின் தர வரிசை மாறுபட்டதாகவே இருக்கிறது. குறிப்பாக இலங்கை, இந்தியா, ஐ.நா, அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ஜப்பான் என்று நீளும் எதிரிகள் பட்டியல் தனி நபர்களின் வசதிக்கு தங்குந்தாற்போல் விஷத்தன்மைக்கான தர வரிசை மாற்றி கட்டமைக்கப்படுகிறது. இந்த தரப்படுத்தல் முறையானது தனி நபர் விருப்பம், அரசியல் கொள்கைகள், முட்டு கொடுக்கும் அமைப்புகளின் விருப்பம், காசு கொடுக்கும் கட்சிகளின் கொள்கை மற்றும் சா-பூ-த்ரீ போன்ற இதர அறிவியல் பூர்வமான முறைகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த நேயர் விருப்ப பட்டியலை நியாயப்படுத்த தங்கள் தரப்பு வாதங்களையும் எடுத்து வைக்கின்றனர். மேற்குறிப்பிட்ட அனைவருமே துரோகிகள் என்பதால் கருத்து பரப்பல் செய்ய எல்லா தரப்பினருக்குமே போதுமான தரவுகள், தகவல்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் இந்த தரப்படுத்தலில் மிக நுட்பமாக காப்பாற்றப்படும் நாடு இந்தியா தான். தமிழ் தேசியவாதிகள் என்று காட்டிக்கொள்ளும் பலர் இந்திய குடிமக்களாக இருப்பதனால் அவர்களின் தாய்நாட்டு பாசம் மெச்சத்தக்கதே என்றாலும், அதற்கு பின்னாலுள்ள அரசியலை நாம் சற்ற...

இலங்கையின் இனப்படுகொலையின் மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு கோரி - கருத்தரங்கம்

இலங்கையின் இனப்படுகொலை மீது தற்சார்புள்ள பன்னாட்டு புலனாய்வு நடத்த கோரி கருத்தரங்கம் நாள்: 02 மார்ச் , 2013 , மாலை 4.00 மணி இடம்: செ.தெ.நாயகம் பள்ளி, தி.நகர் இன்று நடந்த இந்த கருத்தரங்கில் கீழ்கண்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினர். 1.        T.S.S மணி, மனித உரிமை போராளி 2.        இரா. அருள், பசுமை தாயகம், மாநில அமைப்பாளர் 3.        மருத்துவர். வேலாயுதம், சமூக முன்னேற்ற சங்கம், மாநில தலைவர் 4.        நாகராஜன், Global Tamil Organization 5.        செல்வ பாண்டியன், தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்     மேலும் பலர்  கீழ்கண்ட கருத்துகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன: T.S.S. மணி : ·         இனப்படுகொலையா அல்லது போர் குற்றமா என்று தமிழர்கள் மத்தியில் குழப்பம் இருக்கிறது. போர்குற்ற புலனாய்வு ஈழ விடுதலையை தடுக்கும் என்றெல்லாம் சொல்...